முஸ்லிமின் இரத்தம் புனிதமானது
பிரிவுகள்
மூலாதாரங்கள்
Full Description
முஸ்லிமின் இரத்தம் புனிதமானது
< தமிழ் >
கலாநிதி அஷ்ஷெய்க் “ஸாலிஹ் இப்னு முஹம்மத் ஆல் தாலிப் -
17/2/1432 மஸ்ஜிதுல் ஹராமில் நிகழ்த்திய ஜும்ஆ பிரசங்கம்.
اسم المؤلف
Translator's name:
அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்
Reviser's name:
முஹம்மத் அமீன்
ترجمة:
حرمة دم المسلم
< لغة المادة > تاميلي
اسم المؤلف
فضيلة الشيخ صالح بن محمد آل طالب - حفظه الله
ترجمة: محمد مخدوم عبد الجيار
مراجعة:محمد أمين
முஸ்லிமின் இரத்தம் புனிதமானது
கலாநிதி அஷ்ஷெய்க் “ஸாலிஹ் இப்னு முஹம்மத் ஆல் தாலிப்" அவர்கள் 17/2/1432 மஸ்ஜிதுல் ஹராமில் நிகழ்த்திய ஜும்ஆ பிரசங்கம்.
தமிழாக்கம்
அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்
இறைவனின் படைப்பினங்கள் அழகிய தோற்றமும், உருவாக்கமும், கட்டமைப்பும் கொண்டவையாக இருக்கின்றன. அவனது இராச்சியத்தில் அற்புதமான படைபினங்களையும், ஒருங்கிணைக்கப் பட்ட செயற் பாடுகளையும் காணலாம்.
வானங்களும் அதனை நிர்வகிக்கும் வானவர்களும், பூமிகளும் அதன் படைப்பினங்களும், ஆல்கடலும் அதில் வாழும் உயிரினங்களும் என அற்புதமான பல படைப்பினங்கள்.
அதன் உருவாக்கமும், கட்டமைப்பும் அழகின் எல்லையில் இருப்பதையும், மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் வடிவமைக்கப் பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
இந்த படைப்பினங்கள் எல்லாவற்றையும் விட மனிதன் மிக மிக உயர்வானவனாக படைக்கப் பட்டுள்ளான். ஏனைய படைப்பினங்களுடன் ஒப்பிடுகையில் அவனது நிலை கிரீடத்தில் பொதிந்துள்ள இரத்தின கற்களைப் போன்றும், முன்னெற்றி ரோமத்தை போன்றும் முன்னிலையில் இருக்கின்றது.
மனிதனைப் பொறுத்தவரையில் இறைவன் அவனை மிக்க அழகானவனாகவும், உயர்வானவனாகவும், புனிதமானவனாகவும் படைத்துள்ளான்.
இதனையே பின்வரும் அல் குர்ஆன் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ [الإسراء: 70]،
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (17:70)
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ (6) الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ (7) فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ [الانفطار: 6 - 8]،
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை ஏமாற்றி விட்டது எது? அவன்தான் உன்னைப் படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி, உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். (82: 6 - 8)
وَالتِّينِ وَالزَّيْتُونِ (1) وَطُورِ سِينِينَ (2) وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ (3) لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ [التين: 1- 4].
அத்தியின் மீதும், ஒலிவ் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக - “ஸினாய்" மலையின் மீதும் சத்தியமாக - மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக - திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:1-4)
கொலையின் கொடூரம்
மனிதன் இறைவனால் கட்டி எழுப்பப் பட்ட கட்டிடம் போன்றாவான். அவனைப் படைத்து உருவமைத்து அவனது ரூஹில் இருந்தும் ஊதி உள்ளான். அவனுள் ஊதப்பட்டுள்ள “ரூஹ்" (உயிர்) இறைவனின் அடமானமாகும். அவனது நரம்பு நாளங்களில் ஓடும் இரத்தம் இறைவனின் அமானிதமாகும்.
இந்நிலையில் இறைவனின் அந்த கட்டிடத்தை அத்துமீறி வந்து ஒருவன் உடைத்தெறிந்து, அவனது ரூஹை சூறையாடி, அவன் வழங்கிய இரத்தத்தை அநியாயமாக வீணடித்தால், அத்து மீறப்பட்டவன் யாராக இருந்தாலும் அது மிகவும் கொடிய கொடூர குற்றமாக கருதப் படும்.
இறைவனையும் இறைத் தூதரையும் விசுவாசித்து, அல் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றி, மார்க்க கடமைகளை நிறைவேற்றி வந்த ஒரு முஸ்லிமின் மீது அத்து மீறுவது முற்றிலும் ஆபத்தான மிகவும் பெரிய கொடூர குற்றமாக கருதப்படும்.
இதனால்தான் கஃபாவின் புனிதத்தை விடவும் ஒரு முஸ்லிம் கண்ணியமானவனாக கருதப் படுகிறான். முஸ்லிம் ஒருவரை கொலை செய்வது இறைவனின் மார்க்கம் அழிக்கப்படுவதை விடவும் பாரதூரமானதாகும். (திர்மிதி, நஸாஈ போன்ற நூல்களில் வந்துள்ள செய்திகள் இந்த கருத்தை உறுதி செய்கின்றன).
அகிலத்தின் அதிபதி அல்லாஹ் இறக்கி அருளியுள்ள பின்வரும் சங்கை மிக்க அல் குர்ஆன் வசனம் ஒரு தனி மனிதனுக்கு இஸ்லாம் வழங்கும் மதிப்பையும் மரியாதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا [النساء: 93]
எவனேனும் ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (4:93)
கொலைக் குற்றத்திற்கு இறைவன் விடுக்கும் கடும் எச்சரிக்கை. எந்தவித பின்நூட்டலோ, வியாக்கியானமோ இன்றி விளங்க முடியுமான மிகவும் தெளிவான வசனம்.
நபிமார்கள் வந்து சென்று நீண்ட நாட்கள் சென்று விட்ட நிலையில், மனித உயிர்களின் மதிப்பும், பெறுமதியும் மனித உள்ளங்களை விட்டும் அகன்று விட்டன. மனித இரத்தத்தை ஓட்டுவதை மிகவும் இலேசாக கருதி விட்டனர். ஒருவருக்கொருவர் தாக்குதல் நடாத்துவதை சாதாரணமாக கருதுகின்றனர். இதனால் புனித மிக்க மனிதன் மிகவும் கேவலமானவனாக மாறிவிட்டான்.
உலக பேராசை, மார்கத்தின் பெயரால் இடம் பெறும் இன, மத, தேசிய வாதம், அரசியல் வெறுப்புணர்வுகள் போன்றவையே இந்நிலைக்கு மனித சமூகத்தை தள்ளிவிட்டது. இஸ்லாத்தை முறைகேடாக விளங்கியதோடு, மடமைக் கால சிந்தனைகள் உள்ளங்களில் குடிகொண்டமையே இதற்கு பிரதான காரணிகளாக விளங்குகின்றன.
இஸ்லாம் வந்த போது அரேபியர்கள் அறியாமை என்னும் ஆடைகளுடன் வளம் வந்து கொண்டிருந்தனர். சிலர் மனிதனை விட மிருகங்களை மதிப்பிற்குரியதாக கருதி வந்தனர். இதன் காரணமாகவே சாதாரண ஓர் ஒட்டகத்திற்காக அரேபியர்களுக்கு மத்தியில் பல தசாப்த காலமாக யுத்தங்கள் மூண்டுள்ளன. இதனால் பல உயிர்கள் மாய்ந்து போய் உள்ளன. பல கோடி பேர் படு காயங்களுக்கு ஆளாகி உள்ளனர். மனித இரத்தங்கள் வெள்ளமாக ஓடி உள்ளன.
கவிதையின் ஒரு வரியின் காரணமாக, அல்லது ஒரு வார்த்தையின் காரணமாக இரு வெவ்வேறு அரபு கோத்திரங்களிடையே பாரிய யுத்தங்கள் மூண்ட வரலாறுகளும் உண்டு. “யுத்தத்தின் ஆரம்பம் ஒரு வார்த்தை" என்பது அரேபியர்களின் பழமொழி.
ஏதாவது ஒரு அரேபிய கோத்திரத்தில் மதிப்பிற்குரிய ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டால், அதற்காக பல பேரை பலி தீர்க்காமல் விடமாட்டார்கள். கொலை குற்றங்களை இந்த அளவுக்கு சாதரணமாகவும், இலேசாகவும் கருதி வந்தார்கள்.
அறிவின் ஒளி மங்கி, மனிதர்களிடையே மார்க்கத்தின் பெறுமதி குன்றிப் போய், மக்கள் அறியாமையில் மூழ்கிப் போன போதே இஸ்லாம் வந்து, மனித சமூகத்திற்கு உரிய மதிப்பை வழங்கியது. வணங்கி வழிப்பட தகுதி மிக்க ஒரே இறைவனை வணங்குவதை முதல் நிலைக் கடமையாக ஏற்படுத்தியது இஸ்லாம். கற்கள், மரங்களை வணங்குவதை விட்டும் மனித சமூகத்தை தூய்மை படுத்தியது.
அதன் பிறகு மனித உயிருக்கு உரிய மதிப்பை வழங்கிய இஸ்லாம் கடந்த கால பனூ இஸ்ரேல் சமூகத்திற்கு விதித்த சட்டங்களில் ஒன்றை இந்த சமூகத்திற்கும் விதியாக்கியது. அல் குர்ஆன் அதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றது,
قال الله - عز وجل -: مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا [المائدة: 32].
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவனொருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். (5:32)
ஒரு மனிதனுடைய வாழ்வை குறைத்து மதிப்பிடுவது மக்கள் யாவரையும் அவமானப் படுத்துவது போன்றாகும், ஒரு ஆத்மாவை கொலை செய்வது முழு மனித சமூகத்தையும் கொல்வது போன்றாகும். ஒரு மனிதனின் உயிரின் மகத்துவம் முழு உம்மத்தின் உயிர்களுக்கு சமமாக கருதப்படும். ஒரு மனிதனை வாழ வைப்பது முழு மனித சமூகத்தையும் வாழ வைப்பதற்கு சமனாகும் என்பதையே மேற்படி அல் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகிறது.
ஆனால் அறியாமை கால மக்களோ ஒரு உயிருக்கு பதிலாக ஒரு சமூகத்தையே கொன்று குவித்துள்ளார்கள் என்று வரலாறு குறிப்பிடுகின்றது.
முஸ்லிமோ, இறை மறுப்பாளரோ யாராக இருந்தாலும் அவனுடைய உயிர், உடைமைகள், உரிமைகளை பாதுகாப்பதற்காக இறைவன் பல்வேறு சட்டதிட்டங்களை விதித்துள்ளான். இறைவனுக்கு இணை கற்பித்தல் மிகப்பெரிய பாவமாகும். இது போன்றே, கொலை குற்றம் புரிந்தவனது தௌபா ஏற்றுக் கொள்ளப்படுமா? இல்லையா? என்று அறிஞர்கள் கருத்து முரண்பாடு கொள்ளுமளவுக்கு கொலை என்பது ஆபத்தான குற்றமாக கருதப் படுகிறது.
قال رسول الله - صلى الله عليه وسلم -: «كل دمٍ عسى الله أن يغفره إلا الرجل يموتُ كافرًا، أو الرجل يقتل مؤمنًا متعمِّدًا»؛ أخرجه أبو داود، وقال الحاكم: صحيحٌ الإسناد، وأخرجه النسائي أيضًا.
“இறை நிராகரிப்பாளனாக மரணித்தவனையும், ஒரு இறை விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தவனையும் தவிர ஏனையோர் அனைவரினதும் பாவங்களையும் இறைவன் மன்னிக்க கூடும்" என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூ தாவூத், நாஸாஈ)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் உட்பட சகாபாக்களில் ஒரு குழுவினர், ஒரு இறை விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தவனின் தவ்பா அங்கீகரிக்கப் பட மாட்டாது என கருதி வந்துள்ளனர்.
وعن ابن عمر - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: «لن يزال المسلمُ في فُسحةٍ من دينه ما لم يُصِب دمًا حرامًا»؛ رواه البخاري.
ஒரு முஸ்லிம் அநியாயமாக ஒருவரை கொலை செய்து விட்டால் அவனது மார்கத்தின் விசாலத் தன்மையில் இருந்து அவன் தூரமாக்கப்பட்டு விடுவான். (இறை அருளை இழந்து அவனது நிலைமகள் நெருக்கடியாக மாறிவிடும்) என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
وعن عبد الله بن عمر - رضي الله عنهما - قال: "إن من ورطات الأمور التي لا مخرج لمن أوقع نفسَه فيها: سفكَ الدم الحرام بغير حِلِّه"؛ رواه البخاري.
“தப்பிக்க வழியின்றி அழிவுக்குள் தள்ளிவிடும் குற்றச் செயல்களில் ஒன்று தான் உரிமையின்றி ஒருவனை கொலை செய்வது என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்,
وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا (68) يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا [الفرقان: 68، 69].
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்க மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர். (25:68,69)
وعن عبد الله بن مسعود - رضي الله عنه - قال: قال النبي - صلى الله عليه وسلم -: «أول ما يُقضَى بين الناس في الدماء»؛ أخرجه البخاري ومسلم.
“மனிதர்களுக்கு மத்தியில் கொலை குற்றங்கள் தொடர்பிலேயே மறுமையில் முதலில் விசாரணை நடாத்தப் படும்" என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின் றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
وفي "الصحيحين" قال النبي - صلى الله عليه وسلم -: «أكبرُ الكبائر: الشرك بالله، وقتل النفس، وعقوق الوالدين، وقول الزور»
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறு செய்வது, கொலை செய்வது மற்றும் பொய் பேசுவது ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
தற்கொலை
மனித உயிர் இறைவனுக்கு சொந்தமானது; அதனை அமானிதமாக இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான்; விதிக்கப்பட்ட மரணம் வரும் வரை அதனை பாதுகாப்பது அவனது பொறுப்பாகும். அதன் மீது அடந்தேறி உயிரைப் போக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. எவரேனும் ஒருவன் தனது உயிரின் மீது அடந்தேறினால் மறுமையில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவான் என அல் குர்ஆன் எச்சரிக்கின்றது.
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا (29) وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا [النساء: 29، 30].
நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (4:29,30)
ஒருவன் தன்னைத் தானே அழிவுக்குள் தள்ளிவிடுவதும், தற்கொலை செய்வதும் பெரும் குற்றமாகும். இதனையே பின்வரும் செய்தி தெளிவு படுத்துகிறது.
وفي "الصحيحين" أيضًا: شهِدَ النبي - صلى الله عليه وسلم - لقاتل نفسه بالنار مع أنه كان يُجاهِد مع المسلمين، لكنه جزِعَ من جِراحه.
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், 'இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து, 'இவர் நரகவாசிகளில் ஒருவர்' என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள், 'அவர் நரகத்திற்கே செல்வார்" என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல்லை பற்றி) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, 'அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள். பிறகு, பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, 'முஸ்லிமான ஆன்மாதான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்" என்று பொது அறிவிப்பு செய்தார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒருவனுக்கு ஏற்படும் சோதனைகளுக்காகவோ, துன்பம், துயரங்களுக்கா கவோ தற்கொலை செய்து கொள்ள முடியாது. அவ்வாறு செய்து கொண்டால் அவன் நரகத்துக்கே செல்ல வேண்டி வரும் என்பது தெளிவு.
அண்மைக் காலங்களில் தற்கொலைக் குற்றங்களின் தோற்றப்பாடு அதிகரித்துள்ளமை அவதானிக்கத் தக்கதாகும். மார்க்கத்தை அறியாமை, இறை நம்பிக்கை விசுவாசத்தில் ஏற்பட்டுள்ள பலகீனத் தன்மை, வேலையின்மை, மன அழுத்தம், போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இந்நிலைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.
எனவே சீர்திருத்தவாதிகள், கல்விமான்கள் இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்தி இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளோரை சீர் திருத்தம் செய்வது அவசியமாகும். அவநம்பிக்கை, ஏமாற்றம், விரக்தியை ஏற்படுத்தும் காரணிகள் ஆராயப்பட்டு, அதற்கு சரியான சிகிச்சை வழங்கப்படல் வேண்டும். இறைவன் மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டோரின் உள்ளங்களில் வளர்க்கப்படல் வேண்டும். இதன் மூலமே இந்நிலை சீராகும்.
கொலைக் குற்றங்களை தடுத்து நிறுத்த மரண தண்டனையே உரிய வழி
உலகில் சில மனிதர்களின் உள்ளங்களில் கொடூர புத்தி மேலோங்கி கொலைக் குற்றங்களை அச்சமின்றி அரங்கேற்றும் போது, அதனை தடுத்து நிறுத்த மரண தண்டனையே உரிய வழி என இறைவனின் நீதி மிக்க மார்க்கம் எடுத்துரைக்கிறது. மரண தண்டனை நடை முறைப்படுத்தப் படுவதன் ஊடாகவே ஏனையோருக்கு நிம்மதி மிக்க வாழ்வு கிட்டும் என்பதை பின் வரும் வசனம் தெளிவு படுத்துகிறது.
وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ [البقرة: 179]
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் (மரண தண்டனை) மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (2:179)
மரண தண்டனை மூலமாக ஏனைய அனைவரினதும் வாழ்வு பாதுகாக்கப் படுகிறது என்பதையே இந்த அல் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகிறது.
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ [المائدة: 45]
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (5:45 )
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ [الأنعام: 151].
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (6:151)
وقال - صلى الله عليه وسلم -: «سِباب المسلم فسوق، وقِتاله كفر»؛ رواه البخاري ومسلم.
'ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
وقال - صلى الله عليه وسلم -: «إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار». قلتُ: يا رسول الله! هذا القاتل، فما بالُ المقتول؟ قال: «إنه كان حريصًا على قتل صاحبه»؛ رواه البخاري.
'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, 'அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்' என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம் புகாரி)
முற்றும்'