வஸீலா! அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததும் தலைப்பு
மொழிபெயர்க்கப்பட்ட விடயங்கள்
பிரிவுகள்
Full Description
வஸீலா! அனுமதிக்கப்பட்டதும்,
அனுமதிக்கப்படாததும்
தலைப்பு
< தமிழ் >
நூல்ஆசிரியர்
அப்துல்ஹமீத் அல் அஸரீ
மொழி பெயர்ப்பாளர்
Y.M செய்யது இஸ்மாயில் இமாம்
மீளாய்வு செய்தவர்
முஹம்மத் அமீன்
التوسل المشروع والممنوع
< تاميلية >
اسم المؤلف
عبد الله بن عبد الحميد الأثري
ترجمة:
سيد إسماعيل إمام بن يحيى مولانا
مراجعة:
محمد أمين
வஸீலா! அனுமதிக்கப்பட்டதும்,
அனுமதிக்கப்படாததும்
என்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் நமது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார் தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
ஈருலகிலும், குறிப்பாக மறுஉலகில், ஈடேற்றம் பெற்று, சுக வாழ்வு பெற அல்லாஹ்வின் கருணையும் அன்பும் தேவை. அதனை அடைய, அவனும், அவனின் தூதரும் காட்டித் தந்துள்ள நல்லமல்களைச் செய்து வருவதே ஒரே வழி. ஆனால் இதனை அடைய குறுக்கு வழிகளையும், ஷரீஆ அனுமதிக்காத வழி முறைகளையும் மக்கள் கையாண்டு வருகின்றனர். அதற்கு மதப் புரோகிதர்களும், சந்தர்ப்பவாதிகளும் தூபமிட்டு வருகின்றனர். அப்படியான வழி முறைகளில் ஒன்றுதான் 'வஸீலா' இது அல்லாஹ்வின் திருப்தியையும், அவனின் நெருக்கத்தையும் அடையும் ஒரு மார்க்கமாகக் கருதப்படுகிறது. அல்லாஹ்வின் திருப்தியை எல்லா மனிதனும் அடைய வேண்டுமென்பதே இஸ்லாத்தின் இலட்சியம்.
எனவே அதனை அடையும் வழிமுறை - 'வஸீலா' ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம் இருந்தால், அது ஏற்றுக்கொள்ளப்படும். இல்லையெனில் அது நிராகரிக்கப்பட வேண்டியதே. எனவே இதனைத் தெளிவு படுத்தி, அப்துல்லாஹ் பின் அப்துல் ஹமீத் அல்அஸரீ என்பார், التوسل المشروع والممنوع எனும் பெயரில் ஒரு மடலை வெளியிட்டுள்ளார். அதனை அடியேன் “வஸீலா! அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப் படாததும்" எனும் பெயரில் மொழி பெயர்த்துள்ளேன். இதன் மூலம் இஸ்லாமிய சமூகம் பயன் பெற அல்லாஹ் அருள் புரிவானாக.
وصلى الله وسلم على نبيينا محمد وعلى آله وصحبه اجمعين
திக்குவல்லை இமாம் (ரஷாதீ- பெங்களூர்)
20\09\2015
التوسل المشروع والممنوع
عبد الله بن عبد الحميد الأثري
دار ابن خزيمة
المترجم/ سيد إسماعيل إمام بن يحيى مولانا
வஸீலா! அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததும்
புகழ் யாவும் சர்வலோக இரட்சகன் அல்லாஹ் வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் எல்லா நபிமார்களின் முத்திரையாம் நமது தூதர், முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், அன்னாரின் கிளையார், தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
அஹ்லுஸ்ஸுன்னா, வல்ஜமாஅத்தின் பெரும் பாண்மை அறிஞர்கள், 'வஸீலா' சட்டரீதியானது என்ற விடயத்தில் ஒருமித்தக் கருத்தையுடையவர்களே. எனினும் அல்குர்ஆனி லும், ஸுன்னாவிலும், மற்றும் நமது முன்னால் நல்லோர்களான சான்றோர்களின் நடைமுறைகளி லும் வஸீலா சம்பந்தமாக வந்துள்ள விடயங் களைப் புரிந்து கொள்வது சில முஸ்லிம்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றியுள்ளது.
அவர்கள் அவ்விடயங்களை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளுக்கும், ரஸூல்(ஸல்) அவர்களின் வழி காட்டல்களுக்கும் முரணாக விளங்க ஆரம்பித்துள்ளனர். பலவீனமான மற்றும் புணையப்பட்ட போலி ஹதீஸ்களை அதற்கு ஆதாரமாகவும் முன் வைக்கின்றனர். மேலும் இதை விடவும் ஒரு படி தாண்டி, வஸீலா பற்றிய தங்களின் தவறான விளக்கங்களுக்குப் பொருத்தமாக திரு வசனங்களுக்கு வியாக்கியான மளித்து வருகின்றனர், இவ்வாறு அவர்கள் நேர் வழியை விட்டும் வெகு தூரம் போய் விட்டனர்.
எவ்வாராயினும் அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் கூற்றுக்களை புரிந்து கொள்வதில் நம்மிடையே முரன்பாடு ஏற்படுகின்ற போது, அவற்றை சான்றோர்களான ஸஹாபா பெரு மக்களும், தாபிஈன்களும் எப்படி புரிந்து கொண்டார்களோ அப்படியே அதனை நாமும் விளங்கிக் கொள்ள முன்வர வேண்டும். அவர்களின் பால் நம் கவணத்தைத் திருப்ப வேண்டும். ஏனெனில் அல்குர்ஆன், ஸுன்னாவாகிய இரு வஹீயின் காலத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவர்களே. அன்னவர்களின் காலம்தான் காலத்தால் சிறந்தது, என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சான்று பகர்ந்துள்ளார்கள்.
خير الناس قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم». [البخاري[
“சிறந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் எனது காலத்தவர். பின்னர் அவர்களை அடுத்தவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வருகிறவர்கள்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரீ)
எனவே மனோ இச்சையானது அல்லாஹ் வின் பாதையை விட்டும், தவறான வழியின் பக்கம் கொண்டு செல்லக் கூடியது என்றபடியால், அவற்றைப் புறக்கணித்து நமது சிறந்த சான்றோர்களின் முறையினைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் மீதும், அவனின் தூதரின் மீதும் விசுவாசம் கொண்டுள்ள சகல முஸ்லிம்களின் மீதும் கடமை என்பதை அறிதல் வேண்டும்.
ஆகையால் அதிக அளவில் சர்ச்சைக் குள்ளாகி இருக்கும் நுற்பமான இந்த விவகாரம் குறித்தும், பித்அத் வாதிகளும், மனோ இச்சை வாதிகளும் புரிந்து கொள்ளத் தவறியுள்ள இந்த விடயம் குறித்தும் தெளிவு படுத்தலாம் என எண்ணினேன். எனவே எனக்குத் உளத் தூய்மையும், சரியான கருத்தையும் தந்து, உதவுமாறு தயாளமிகு அல்லாஹ்வை வேண்டிக் கொண்டவனாக என்னால் முடிந்த வரையில் இது தெடர்பான ஆதாரங்களை அல்குர்ஆனிலிருந்தும் ஸுன்னாவிலிருந்தும் ஒன்று திரட்டினேன்.
வஸீலா-ஓர் விளக்கம்
ஓர் இலக்கின் பால் கொண்டு சேர்க்கும், அல்லது நெருங்கச் செய்யும் காரணிகள், அல்லது விருப்பத்துடன், குறித்த இலக்கை சென்றடைதல் என்பன, 'வஸீலா, தவஸ்ஸுல்' என்பதன் மொழி அடிப்படையிலான பொருளாகும். மேலும் மன்னர்களிடம் கிடைக்கப் பெறும் உயர் பதவி, அந்தஸ்து, அவர்களின் நெருங்கிய நிலை என வேறு பொருள்களும் இதற்குண்டு.
மேலும் இதன் மரபுக் கருத்தாவது, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் அடையும் பொருட்டு சட்டரீதியான வழிமுறை யொன்றைப் அடைதல், என்பதாகும். எனவே அல்லாஹ்வின் திருப்தியை அடையவும், அவனின் நெருக்கத்தைப் பெறவும் மற்றும் அவனிடம் உயர் அந்தஸ்தத்தைப் பெறவும், மேலும் நன்மை எதனையும் அநுகூல மாக்கிக் கொள்ளுதல், தீமையினைத் தடுத்துக் கொள்ளுதல் எனும் தேவை எதனையும் நிறைவேற்றிக் கொள்ளவும், அல்லது இம்மையிலும் மறுமையிலும் தான் அடைய விரும்பும் விடயத்திற்காக மேற் கொள்ளும் இபாதத்துக்கள், மற்றும் அதனை அடைந்து கொள்வதற்காக நபியவர்களின் ஸுன்னாவின் மூலம் வழியுறுத்தப்பட்டுள்ள கர்மங்களை மேற் கொள்ளுதல் என்பவையே இதன் மூலம் கருதப்படகின்றன. ஆகையால் வஸீலா என்பது அல்லாஹ் விதியாக்கியுள்ள காரியங்களைக் கொண்டல்லாது, வேறு எவ்வகையிலும் மேற்கொள்ளப்படும் வஸீலா அனுமதிக்கப்படவில்லை.
வஸீலாவின் அடிப்படைகள்
வஸீலாவுக்கு மூன்று விடயங்கள் அடிப்படையாக அமைகின்றன. அவை முறையாகவும் சரியாகவும் அமையும் போது தான் அவை அனுமதிக்கப் பட்ட வஸீலாவாக அமையும். அவையாவன.
1-யாருடைய நெருக்கத்தை அடைய எதிர்பார்க்கப் படுகின்றதோ அந்த நபர். இதன் மூலம் கருதப்படுகிறவன் அல்லாஹ்வே.
2-தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வமுள்ள பலவீனமான அடியான். இவனை வாஸில், முதவஸ்ஸில்- வஸீலாவை மேற் கொள்பவன் என்பர்.
3-சம்பந்தப்பட்டவனின், அதாவது அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும் பொருட்டு மேற் கொள்ளப்படும் செயல்.
*எனவே இலக்கை அடையும் பொருட்டு எந்த காரியத்தின் மூலம் வஸீலா மேற் கொள்ளப் படுகின்றதோ அந்தக் காரியம், விதி முறைக்கு உட்பட்டதாகவும், ரஸூல் (ஸல்) அவர்களின் ஸுன்னாவை விட்டும் விலகி விடாது கூட்டல், குறைவுகளுக்குள்ளாகாமல் இருத்தல் அவசியம். மேலும் அக்காரியம் எந்தக் நேக்கத்துக்காக விதிக்கப்பட்டதோ, அதன் வரையரைக்குள் அது கட்டுப்படுத்தப்படல் வேண்டும் என்பதையும், முஃமின் அல்லாதவரின் கர்மமும், மற்றும் பித்அத்தான காரியமும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத் தராது, என்பதையும் இதன் மூலம் நாம் அறிதல் வேண்டும்.
வஸீலாவின் வகைகள்
வஸீலா, இரு வகைப்படும். அவையாவன
1- சட்டரீதியான, அனுமதிக்கப்பட்ட வஸீலா
2- நிராகரிக்கப்பட்ட வஸீலா என்பன.
சரியான சொல், செயல், நம்பிக்கை சார்ந்த வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை நெருங்கும் வழி முறைகள், சட்டரீதியான ஏற்றுக் கொள்ளப்பட்ட வஸீலா எனப்படும். இவற்றில் மூன்று விடயங்கள் அடங்கும். அவையாவன,
1. அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்கள்.
இவை அல்லாஹ்வை நெருங்க சிறந்த ஊடகமாகவும், காரணியாகவும் விளங்குகின்றன. மேலும் இவை மிகவும் பயன் தரக் கூடியவை. இது பற்றிய அல்லாஹ்வின் திரு வசனம் வருமாறு
وَلِلَّـهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ (الأعراف/180)
“அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டு நீங்கள் அவனை அழையுங்கள்"(7/180)
அல்லாஹ்வின் திரு நாமங்களையும் பண்புகளையும் கொண்டு, அவனை நெருங்கும் வஸீலா - வழி முறை சட்டபூர்வமானது, அனுமதிக் கப்பட்டது, அதனை அவன் விரும்புகின்றான், அதன் மீது திருப்தி அடைகின்றான் என்பதை, இத்திரு வசனம் உறுதிப்படுத்துகின்றது. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புரிந்த துஆக்களைக் கொண்டு பிரார்த்தனை செய்வது அங்கீகரிக்கப்பட்டது, என்பதால் அவை மூலம் பிரார்த்தனை புரிவது ஒரு விரும்பத் தக்க செயலாகும். ஸஹாபாக்களும், தாபிஈன்களும் மற்றும் தபஉத் தாபிஈன்களும் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளனர், என்பது குறிப்பிடத் தக்கது
2- தான் செய்த நல்ல கருமத்தை முன் நிறுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும் வழி முறை.
உதாரணமாக ஒரு அடியான் “அல்லாஹ்வே! உன் மீதுள்ள எனது நம்பிக்கையையும். அன்பையும் மற்றும் உன் தூதரை நான் பின்பற்றி நடப்பதையும், அவரின் மீதான எனது நம்பிக்கையையும் முன் வைத்து உன்னிடம் வேண்டுகிறேன். எனது துக்கம் துயரங்களை நீக்கி யருள்வாயாக." என்று பிரார்த்தனை புரிவதைக் குறிப்பிடலாம். அவ்வாறே அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளல், தொழுகை, நோன்பு, ஜிஹாத் போன்ற கடமைகள், அல்குர்ஆனைப் பாராயணம் செய்தல், திக்ரு, ஸலவாத்து, இஸ்திஃபார்களில் ஈடுபடுதல், மற்றும் பொதுவாக நல்ல கருமம் எதுவாயினும் அதில் ஈடுபடுதல், ஹராமான காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுதல் போன்ற தான் செய்த, செய்கின்ற நல்ல வழிபாடுகளையும், செயல்களையும் முன் நிறுத்தி அல்லாஹ்விடம் ஒருவர் தனது தேவையை முறையிடலாம். இதுவும் அனுமதிக்கப்பட்ட வஸீலாவே. இதற்கு.
الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ﴿١٦/آل عمران﴾
“இத்தகையவர்கள் “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கிறோம். ஆகையால் நீ எங்களின் பாவங்களை மன்னித்து நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காத்தருள்வாயாக" என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். (3/16) என்ற இறை வசனமும், ஹதீஸில் பதிவாகியுள்ள “முன்னைய சமூகத்தைச் சார்ந்த மூவர் ஒரு குகையில் ஒதுங்கினர். அவ்வமயம் அதன் வாயலை ஒரு பாறை வந்து மூடிக் கொண்டது. அதனுள் சிக்குண்ட அவர்கள், தாங்கள் முன் செய்த முக்கியமான நல்லமல்களை முன் நிறுத்தி பிரார்த்தனை செய்தனர். அப்போது அவர்களின் நெருக்கடியையும், கவலையும் அல்லாஹ் நீக்கினான்" (புகாரீ, முஸ்லிம்) என்ற சம்பவமும் ஆதாரமாக விளங்குகின்றன.
3-பிரார்த்தனை செய்யும்படி ஸாலிஹீன் களை வேண்டுதல்.
அல்லாஹ்வின் விடயத்தில், தான் எல்லை மீறி விட்டதாக நினைக்கும் ஒரு முஸ்லிம், கஷ்டத்தில் சிக்குண்டிருக்கும் போது, அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அறிவைப் பெற்ற, இறையச்சம் உள்ளவரென தான் நம்பும் ஒரு நல்லவரிடம் சென்று தன்னுடைய துக்கம் துயரம் நீங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும்படி அவரை வேண்டுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தன் நோக்கத்தை அடைய இன்னொருவரின் பிராத்தனையை எதிர்பாரக்கும் வஸீலா- வழி முறையும் சட்டரீதியான வஸீலாவே. இதனை,
وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ (الحشر/10)
“மேலும் அவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் 'எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தைகைய எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக' என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்." (59/10) என்ற இறை வசனமும்,
أن رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم كان يقول: " دعوة المرء المسلم لأخيه بظهر الغيب مستجابة
“தன் சகோதரன் பிரசன்னமாக இல்லாத போது, அவருக்காக ஒரு முஃமின் கேட்கும் துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்"(முஸ்லிம்) என்ற நபி மொழியும் உறுதி செய்கின்றன.
மேலும் ஒரு முறை வரட்சியும் பஞ்சமும் ஏற்பட்ட போது, உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள், அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களை முன் நிறுத்தி மழையை வேண்டினார்கள். அவ்வமயம் அவர் “இறைவா! நமது நபியின் மூலம் நாம் உனது நெருக்கத்தைப் பெற்று வந்தோம். அப்போது நீ எங்களுக்கு மழையைத் தந்தாய். இப்போது நமது நபியின் சிறிய தந்தை அப்பாஸின் மூலம் உன்னிடம் நெருங்குகின்றோம். நமக்கு மழையை வருசிப்பாயாக." என்றார்கள். அவ்வமயம் மழை பொழிந்தது. என்று, அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்.(புகாரி)
உமர் (ரழி) அவர்களின் அந்தக் கூற்றின் கருத்தாவது, 'நாம் நமது நபியை நாடிச் சென்று, நமக்காக பிரார்த்தனை செய்யுமாறு அன்னாரை வேண்டுவோம். இவ்வாறு அன்னாரின் பிரார்த்தனை மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாம் பெற்று வந்தோம். ஆனால் ரஸூல் (ஸல்) அவர்கள் திரும்பி வராதபடி மேல் உலகிற்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். ஆகையால் இனியும் நமக்காகப் பிரார்த்தனை புரியும்படி அவர்களிடம் வேண்ட இயலாது. எனவே இப்போது நமக்காகப் பிரார்த்தனை புரியும்படி அன்னாரின் சிறிய தந்தை அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வேண்டுகின்றோம்' என்பதாகும். தங்களுக்காகப் பிரார்த்தனை செய்யும்படி, ஸாலிஹீன்களிடம் வேண்டலாம் எனபதற்கு இந்தச் சம்பவமும் ஆதாதரமாக விளங்குகின்றது.
எனவே இம்மூன்று வகை வஸீலாவும் சட்டரீதியானதும், அனுமதிக்கப்பட்டதுமாகும். இவை தவிர்ந்த வஸீலா அனைத்தும் ஆதாரமற்றவை, ஏற்றுக் கொள்ள முடியாதவை. மேலும் சட்டரீதியான வஸீலாக்களின் விதி முறைகள் பலதரப்பட்டவை. அவற்றில் சில வாஜிபானவை. இன்னும் சில விரும்பத் தக்கவை. வாஜிபான - கட்டாயமான வஸீலாவுக்கு, அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும், ஈமானுடனும், ஏகத்து வத்துடனும் சம்மந்தப்பட்ட காரியங்களையும் முன் நிறுத்தி அல்லாஹ்வை நெருங்க முயலும் கைங்கரி யங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். மேலும் முஸ்தஹப்பான- விரும்பத் தகுந்த வஸீலாவுக்கு, தமது ஸாலிஹான அமல்களை முன் நிறுத்திப் பிரார்த்தனை செய்வதையும், தமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு ஸாலிஹான அடியார் களிடம் விண்ணப்பம் செய்வதையும் உதாரண மாகக் குறிப்பிடலாம். எனவே நெருக்கடிகள் வரும் போது சட்டரீதியான வஸீலாவின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற முயலுவது முஸ்லிமின் கடமையாகும். மேலும் பித்அத்தான, பாவமான அனுகு முறைகள் மூலம் வஸீலாவை மேற்கொள்ளக் கூடாது. அதையிட்டு அல்லாஹ்வை அஞ்சுவதும் அதற்காக வெட்கப் படுவதும், மற்றும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதும் அவசியம்.
அனுமதியற்ற வஸீலாவும், அதன் வகைகளும்
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெரும் பொருட்டு அவன் விரும்பாத, திருப்தியடையாத, சொல், செயல், நம்பிக்கை சார்ந்த காரியங்களைப் பயன்படுத்துவது, அனுமதியற்ற வஸீலாவைச் சாரும்.
இத்தகைய வஸீலாவின் பால் கவணம் செலுத்தி வருவதன் காரணமாக பலர், அனுமதிக்கப்பட்ட சட்டபூர்மான வஸீலாவை மறந்து வேறு பக்கம் திரும்பி விட்டனர். இவ்வாறு அனுமதியில்லாத விடயத்தில் அவர்கள் கவணம் செலுத்தி வந்த காரணமாக சட்டபூர்வமான வஸீலாவின் பாக்கியத்தையும் அவர்கள் இழந்து விட்டனர். இதன் காரணமாக அவர்கள் தங்களின் முயற்சியில் தோழ்வியையும் நஷ்டத்தையுமே வரவழைத்துக் கொண்டனர்.
இனி முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதை அறிவுறுத்தவும், இஸ்லாத்தின் தூதை எத்தி வைக்கவும், அதனை அறிமுகப்படுத்தவும் வேண்டுமென்ற நோக்கத்தில் சட்டத்திற்கு முரணான, அனுமதிக்கப்படாத சில வஸீலாக்களைப் பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமென நினைக்கின்றேன். அவையாவன;
1-இன்னாரின் உரிமையின், அல்லது கீர்த்தியின் பொருட்டால் வேண்டுகிறேன், என்று குறிப்பிடத் தக்க. நபர் எவரையும் முன்னிறுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற கையாளும் 'வஸீலா'- வழி முறை எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இவை சட்டத்திற்கு முரனான, அனுமதிக்கப்படாத வஸீலாவைச் சார்ந்ததாகும்.
اللهم إني أسئلك بجاه نبيك أو بجاه عبدك فلان
“இறைவா! உனது நபியின் கீர்த்தியின் பொருட்டால்", அல்லது 'உனது இன்ன அடியாரின் கீர்த்தியின் பொருட்டால் உன்னிடம் வேண்டுகிறேன்" என்று அலாஹ்விடம் வேண்டுவதும் பித்அத்தான, அனுமதிக்கப் படாத வஸீலாவைச் சார்ந்தவையாகும். இதற்கும் இஸ்லாத்திற்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை.
مَّا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِن شَيْءٍ ۚ(الأنعام/38)
“(இவைகளில்) எதையும் நம்முடைய வேத நூலில் நாம் எதையும் குறிப்பிடாது விட்டு விடவில்லை"(6/38)
என்ற இறைவாக்கும்,
علمنا رسول الله صلى الله عليه و سلم كل شيء حتى الخراءة ) أخرجه مسلم(
“நபி நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எல்லாவற்றையும் கற்றுத் தந்தார்கள். மலம் கழிக்கும் முறையையும் கூட அன்னார் நமக்குக் கற்றுத் தந்தார்கள்," என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் இங்கு கவணிக்கத் தக்கதாகும். ஏனெனில் முக்கிய விடயம் எனக் கருதும் சிறு விடயம் பற்றியும் , மற்றும் அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்களையும், பண்பு களையும் முன்னிருத்தி பிரார்த்தனை செய்யுமாறும், கட்டளையிடும் அல்குர்ஆனும், ஸுன்னாவும் பித்அத்தான வஸீலாவைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பது, அதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்பதற்குப் போதிய சான்றாகும்.
மேலும் சட்ட விரோதமான வஸீலா மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய முயலும் அடியான், ஒரு அமைச்சரை அல்லது ஒரு ஆளுனரை நெருங்குவதற்கு ஒரு இடைத் தரகரின் தேவை இருப்பது போன்று, அலாஹ்வின் நெருக்கத்தை அடைவதற்கு ஒரு நல்லடியாரின் அல்லது இறை நேசரான ஒரு அவ்லியாவின் உதவி தேவை என்ற கோதாவில் தன்னுடைய வஸீலாவை முன்னெடுப்பாராகில், அது அவரை மகா சிர்க்கின் பால் தள்ளி விடும். ஏனெனில் அவனின் இந்த செயல் அல்லாஹ்வை, அவனின் சிருஷ்டியுடன் ஒப்பிட்டு நோக்கும் காரியமாகும். அல்லாஹ்வை அவனின் அடியானுடன் ஒப்பீடு செய்வது தடை செய்யப்பட்ட விடயம் என்பதையும், தன் அடியானின் மீது அல்லாஹ் திருப்தி அடையும் விடயத்திலும் சரி, கோபமடையும் விடயத்திலும் சரி யாருடைய மத்தியஸ்தமும் அவனிடம் பயன் தராது, என்பதையும் புரிந்து கொள்வது அவசியம்.
சிருஷ்டிகளின் பதவியும், அந்தஸ்தும் எதுவாக இருந்தாலும், அவர் ஒரு மலக்காகவோ, நபியாகவோ, ரஸூலாகவோ இருந்த போதிலும், அவர்கள் எவரையும் அல்லாஹ்வுடன் ஒப்பிடலாகாது என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். மனிதனுக்கும், சிருஷ்டிகளுக்கும் அல்லஹ் என்றும் தேவையுள்ள வனாகவே இருக்கின்றான். ஆனால் அல்லாஹ் யாரின் பாலும் தேவையற்றவன். ஆகையால் அவனின் நெருக்கத்தைப் பெற யாரும் இடைத் தரகராக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.
وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّـهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْئًا وَلَا يَسْتَطِيعُونَ ﴿٧٣﴾ فَلَا تَضْرِبُوا لِلَّـهِ الْأَمْثَالَ ۚ إِنَّ اللَّـهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ ﴿٧٤/النحل﴾
“மேலும், அல்லாஹ்வையன்றி வானங்கள் பூமியிலோ உள்ள யாதொரு பொருளையும் இவர்களுக்கு உணவாக அளிக்க சொந்தமாக்கிக் கொள்ளாத (அதற்கு) சக்தி பெறாதவைகளை அவர்கள் வணங்குகின்றனர்."
“ஆகவே அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களை கூறாதீர்கள். நிச்சயமாக நீங்கள் அறியாதவற்றை எல்லாம் அல்லாஹ்தான் அறிவான்." (16/73,74) என்ற இறை வாக்கு அல்லாஹ்வை எதனுடனும் ஒப்பிடவோ, அவனை எதற்கும் உதாரணமாகக் காட்டவோ கூடாது என்பதைத் தெளிவு படுத்துகின்றது.
எனவேதான் ரஸுல் (ஸல்) அவர்களின் வபாத்தின் பின்னர், அன்னாரை ஸஹாபாக்கள் முன்னிறுத்தி வஸீலா செய்யாது, அவர்கள் நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் (ரழி) அவர்களிடம் சென்று மழையை வேண்டி பிரார்த்தனை செய்யுமாறு வேண்டினரே அன்றி, “இறைவா! உனது நபியின் கீர்த்தியின் பொருட்டால் நம்மீது மழையை வருசிப்பாயாக," என்றோ, அப்பாஸ் (ரழி) அவர்களின் வபாத்தின் பின்னர், “இறைவா! அப்பாஸ் (ரழி) அவர்களின் பொருட்டால் நம்மீது மழையை வருசிப்பாயாக என்றோ பிரார்த்தனை செய்யவில்லை. ஏனெனில் இது பித்அத்தான துஆக்கள் என்பதையும், அல்லாஹ்வின் வேதத்தில் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் அவர்கள் அறிவர். எனவேதான் அவர்கள் அவ்வாறு பிரார்த்தனை செய்ய வில்லை என்பது தெளிவு.
மேலும் ஒரு நல்லடியார் மரணமடைந்த பின்னர், அவரின் கீர்த்தியையும், கண்ணியத்தையும் முன்னிருத்தி பிரார்த்தனை செய்யலாம் என்றிருந்தால், நபித் தோழர்கள் அப்பாஸ் (ரழி) அவர்களை வஸீலாவாக ஆக்கிக் கொள்வதைப் பார்க்கிலும், ரஸூல் (ஸல்) அவர்களின் கீர்த்தியின் பெயரால், அல்லது அன்னாரின் பொருட்டால் என்று பிரார்த்தனை செய்வதை மேலாகக் கண்டிருப்பார்கள். ஆனால் அது ஆகாது என்ற படியால்தான் ஸஹாபாக்கள் அவ்வாறு செய்ய வில்லை. மேலும் அனுமதியில்லாத, சட்ட விரோதமான இத்தகைய வஸீலா, மக்கத்து முஷ்ரிகீன்களின் நிலையை ஒத்ததாகும். அவர்களின் நிலை எவ்வாறிருந்தது, என்பதை இறைவசனம் இப்படி குறிப்பிடுகின்றது,
وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّـهِ زُلْفَىٰ(الزمر/3)
“மேலும், அவனையன்றி (மற்றவர்களை) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கி றார்களோ அவர்கள், “எங்களை அவர்கள் நெருக்கத்தால் அல்லாஹ்வுக்கு சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவேயன்றி அவர்களை நாம் வணங்கவில்லை" (என்று கூறுகின்ற னர்) (39/3)
அல்லாஹ் உங்களின் மீது அருள் புரிவானாக. அடியானின் பதவியும் அந்தஸ்தும் எப்படிப் பட்டதாக இருந்த போதிலும், அன்னவரின் கீர்த்தியின், கண்ணியத்தின் பொருட்டால் என்று வஸீலா செய்கின்ற ஒரு அடியான், அந்த மனிதனுக்கு நன்மையைக் கெண்டு வருவதில் அல்லது தீமையைத் தடுத்துவிடுவதில் ஏதேனும் செல்வாக்குண்டென நினைப்பானாகில், அது பாரிய ஷிர்க்கை- இணைய ஏற்படுத்தி, அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும், என்பதைப் புரிந்து கொள்வீர்களாக. நம்மை இதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக.
2. அவுலியாக்களிடமும், ஸாலிஹீன்களிடமும் பாதுகாவல் தேடல், பிரார்த்தனை புரிதல், அவர்களின் பெயரால் நேர்ச்சைகள் சமர்ப்பித்தல், மற்றும் அவர்களின் கீர்த்தியின், கண்ணியத்தின் பெயரால் வஸீலா தேடல், போன்ற காரியங்கள் யாவும் இஸ்லாமிய மார்க்கத்துடன் சம்பந்தமில்லாத, ஏகத்துவத்திற்கு எதிரான விடயங்கள். மேலும் இறந்து போன நல்லடியார்களை அழைத்து “எஜமானே! எனக்குக் கை கொடுங்கள், எனக்கு உதவியாக இருங்கள், எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள், நான் உங்களின் பாதுகாப்பில் இருக்கின்றேன்" போன்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகிப்பதானது இணை வைப்பதை ஏற்படுத்தி விடும்.
அவ்வாறே எனது இன்ன காரியத்தை அல்லாஹ் அநுகூலமாக்கித் தந்தால், அல்லது இன்னதை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு இன்னதைத் தருவேன், சமர்ப்பணம் செய்வேன், என்று இறந்து போன அவ்லியாக்கள், ஸாலிஹீன்களுக்காக நேர்ச்சைகள் செய்வதும் இஸ்லாமிய மார்கத்தை விட்டும் தூரமான செயலாகும். அவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,
وَجَعَلُوا لِلَّـهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَـٰذَا لِلَّـهِ بِزَعْمِهِمْ وَهَـٰذَا لِشُرَكَائِنَا ۖ فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّـهِ ۖ وَمَا كَانَ لِلَّـهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَائِهِمْ ۗ سَاءَ مَا يَحْكُمُونَ ﴿١٣٦/الانعام﴾
“விவசாயம், மற்றும் (ஆடு, மாடு, ஒட்டகம்) போன்ற கால் நடைகள் ஆகியவற்றில் அவன் உற்பத்தி செய்தவற்றில் இருந்து ஒரு பாகத்தை அல்லாஹ்வுக்கென ஆக்கிவிட்ட பிறகு, அவர்கள் எண்ணப்படி “இது அல்லாஹ்வுக்கு உரியது, இது எங்களுடைய இணையாளர்களுக்குரியது" என்றும் கூறுகின்றனர். அவர்களின் இணையாளர் களுக்கு என இருந்த (பாகத்திலிருந்து) எதுவும் அல்லாஹ் விடம் சேருவதில்லை. எனினும் அல்லாஹ்வுக்குரிய (பங்கான)து தங்களது இணையாளர்கள பால் சேரும் என்று அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது (6/136)
ஆகையால் அறியாத சில மக்கள் அல்லாஹ்வை விடுத்து, அவனின் சிருஷ்டிகளின் பால் கவணம் செலுத்துவதும், அவர்களிடம் துஆ பிரார்த்தனை செய்வதும், அவர்களின் நினைவாக குப்பாக்கள் கட்டுவதும், அவர்களின் அடக்கஸ்தலங்களில் விளக்கேற்றுவதும் போன்ற காரியங்கள் எதுவும் ரஸூல் (ஸல் அவர்களினதும் அன்னாரின் தோழர்களினதும் வழிகாட்டலுக்கு உற்பட்டவை அல்ல. எனினும் இடைத் தரகர் இல்லாத பிராரத்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற அவர்களின் நம்பிக்கை தவறானது என்பதையும், அடியான் தன் தேவைகளைப் பற்றிக் நேரடியாக அல்லாஹ்விடம் முறையிட வேண்டும் என்பதையும், அடுத்து வரும் இறைவாக்கு இப்படி கூறுகின்றது,
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ (البقرة: 186)
“உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் “நிச்சயமாக நான் மிகச் சமீபமாகவே இருக்கின்றேன். அழைப்பவரின் அழைப்புக்கு - அவர் என்னை அழைத்தால் நான் விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் நேரான வழியை அடைவதற்காக அவர்கள் எனக்கு பதில் அளிக்கவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும்." (2/186)
மேலும் الدعاء هو العبادة “பிரார்த்தனை என்றால் அதுவே வணக்கம்" என்ற ரஸுல் (ஸல்) அவர்களின் வாக்கும் இங்கு கவணிக்கத் தக்கதாகும். வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரித்தானவை, அவை அவனுக்கு மாத்திரம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயம், அவ்வாறே பிரார்த்தனையும் ஒரு வணக்கம். ஆகையால், அதுவும் அவனிடம் மாத்திரமே கேட்கப்பட வேண்டிய விடயமே என்பதை, இந் நபி மொழி புலப்படுத்துகின்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நபிமார்களும் ரஸூல்மார்களும் கொண்டு வந்த ஏகத்துவத்திற்கு எதிரான இத்தகைய சிர்க்கான கருமங்களை அல்லாஹ் ஏற்றுக்க கொள்ள மாட்டான், இணையான அந்த காரியங்களை மன்னிக்கவும் மாட்டான் என்பதை, இறைவாக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றது.
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மண்ணிக்க மாட்டான். இதனைத் தவிர எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக பெரும் பாவத்தையே கற்பனை செய்து விட்டார். (4/48)
எனவே இத்தகைய ஷிர்க்கான காரியங்களை செய்ப வனும், அவற்றை அங்கீகரிப்பவனும் ஷிர்க்கான பாவ காரியத்தில் சமமானவர்களே என்பதில் ஐயமில்லை.
மேலும் அல்குர்ஆனும் ஸுன்னாவும் அனுமதிள்ள சட்டபூர்வமான வஸீலாவை, செயலில் கொண்டு வராது, பித்அத்தான வஸீலாக்களை நடைமுறைப்படுத்தி வரும் அறிவில்லாத, தங்களை முஸ்லிம் என்று கூறிக் கொள்ளும் சிலர், தாமாக ஏற்படுத்திக் கொண்ட துஆக்களிலும், பித்அத்தான வஸீலாக்களிலும் தஞ்சமடைந்துருப்பதைக் காண உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
இஸ்லாமியச் சோதரர்களே! இஸ்லாமிய மார்க்கதின் அடிப்படையான, ஏகத்துவத்திற்கு எதிரான, சட்ட விரோதமான இந்த வஸீலாக்களைக் கண்டிக்கும் விடயத்தில் நாம் தனிமையானவர்கள் அல்ல. மாறாக ஸஹாபாக்களினதும், தாபிஈன்களினதும், நான்கு இமாம்களினதும் மற்றும் அவர்களைப் பின்பற்று வோர்களினதும் கொள்கையும் இதுவே.
வஸீலாவின் கருத்தை மக்கள் சரியாக புரியாமல் போனமைக்குக் காரணம்
வஸீலாவின் கருத்தை மக்கள் சரியாகப் புரியாமல் போனமைக்கு முக்கியமான முதற் காரணம் 'தக்லீத்'. ஒருவரின் கூற்று பிழை என்பது ஷரீஆவின் ஆதாரங்கள் மூலம் நிரூபனமான பின்னரும், அன்னவரின் ஆதாரமற்ற கூற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதே தக்லீத் எனப்படுகிறது. இத்தகைய தக்லீதை பல திரு வசனங்கள் மூலம் அல்லாஹ் கண்டித்துள்ளான், அவற்றை இழிந்துரைத்துள்ளான். உதாரணமாக அடுத்து வரும் வசனதைக் கவணிப்போம்.
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آَبَاءَنَا أَوَلَوْ كَانَ آَبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَـدُونَ (البقـرة: ١٧٠)
“மேலும், அல்லாஹ் இறக்கி வைத்ததை பின்பற்றுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் “இல்லை. எவற்றின் மீது எங்களுடைய மூதாதைகள் இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர் களாக இருந்தாலுமா?"(2/170)
மேலும் சர்ச்சைகளுக்கும், ஐக்கியத்தைக் குழைப்புவ தற்கும், மற்றும் பிரச்சினைகள் எழும் போது அவற்றை அல்லாஹ்வின் பால் மீட்டிப் பார்க்கத் தடையாகவும் தக்லீத் இருக்கின்ற படியால், சான்றோர்களான முன்னைய உலமாக்களும், முஜ்தஹிதுகளான இமாம் களும் அதனை தடை செய்துள்ளனர். மேலும் தக்லீத் கூடாது என்ற படியால்தான் ஸஹாபாக்கள் எல்லா விடயங்களிலும் குறிப்பிட்ட ஒரு அறிஞரை பின்பற்றினர், என்பதை நாம் காண முடியவில்லை. மேலும்
اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَـذَكَّرُونَ
“உங்களுக்குக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்டதை பின்பற்றுங்கள். அவனயன்றி (வேறெவ ரையும் உங்களுக்கு) பாதுகாவளர்களாக்கி நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும்) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்."(7/3) என்ற திரு வசனத்தின் தாத்பரியத்தை அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டமையும் அதற்கு மற்றுமெரு காரணமும் உண்டு.
இரண்டாவது காரணம்
சட்ட விரோத வஸீலாவாதிகள், வஸீலா சம்பந்தமான எல்லா ஹதீஸ்களையும் இறைவசனங்களையும் சீர்தூக்கிப் பார்க்காமல், தங்களின் நோக்கத்திற்கு ஏற்றாப்போல் அவற்றில் சிலதை ஏற்று இன்னும் சிலதை கவணத்தில் எடுதுக் கொள்ளாமல் புறம் தள்ளியமை இரண்டாவது காரணமாக விளங்குகின்றது. ஆயினும் அவை கூட அவர்களின் நோக்கத்திற்கு தக்க ஆதாரமாக அமையவில்லை. அவற்றின் விளக்கத்தை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவும் இல்லை. இனி அவர்கள் தவறாகப் புரிந்து கொண்ட சில திரு வசனங்க ளையும்.ஹதீஸ்கயும் கவணிப்போம்.
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ} [المائدة: ٣٥]
"விசுவாசம் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவனிடம் நெருங்குவற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள்"(5/35)
இத்திரு வசனத்திலுல்ல 'வஸீலா' எனும் சொல் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதன் மூலமும், அவனுக்கு விருப்பமான கருமங்களின் மூலமும் அவனை நெருங்குதல் எனும் கருத்தையே உணர்த்துகின்றது. இச்சொல்லின் கருத்து இதுவே என்பதில் தப்ஸீர் வியாக்கியானிகளிடம் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும் அல்லாஹ் அல்லாத வற்றைக் கொண்டு பாதுகாவல் தேடுவதற்குச் சான்றாக இத்திரு வசனம் விளங்குகின்றது என்று பிதஅத் வாதிகள் கூறுவது, அல்லாஹவின் வசனத்திற்கு உரிய பொருளைக் கொடுக்காமல் அதனைத் திசை திருப்பும் செயலாகும்.
உமர்(ரழி) அவர்கள், அப்பாஸ்(ரழி) அவர்களை முன்னிறுத்தி மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள், என்ற முன் குறிப்பிட்ட செய்தியும், அவர்கள் தவறாக புரிந்து கொண்ட இன்னொரு விடயமாகும். அதற்கு அவர்கள் கூறும் நியாயமாவது, அப்பாஸ் (ரழி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களுக்குத் தனிப்பட்ட வகையிலும் மிகவும் நெருங்கியவராக இருந்த படியால்தான் உமர் (ரழி) அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்கிறனர். அப்படியா யின் அவர்களுக்கு நாம் கூறுவது இதுதான்.
ஒரு முறை முஆவியா (ரழி) அவர்களின் காலத்தில் வரட்சி ஏற்பட்டது. அவ்வமயம் முஆவியா (ரழி) அவர்கள், அப்பாஸ் (ரழி) அவர்களை முன்னிறுத்தி பிரார்த்தனை செய்யவில்லை. யஸீத் இப்னு அல் அஸ்அத் அல் ஜர்ஷீ என்ற ஒரு நல்ல மனிதரை முன்னிறுத்தியே பிரார்த்தனை செய்தார்கள். அவ்வமயம் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு மழையைப் பொழியச் செய்தான். இந்த சம்பவம் பித்அத் வாதிகள் உமர் (ரழி) அவர்களின் விடயத்தைப் தவறாகப் புரிந்து கெண்டனர் என்பதற்குப் போதிய சான்றாகும்.
*மேலும் ரஸூல் (ஸல்) அவர்களிடம் ஒரு அந்தகர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நல்லாரோக்கியம் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என வேண்டிக் கொண்டார். அதற்கு நபியவர்கள் உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்ய வேண்டுமென நீங்கள் விரும்பின் நான் பிரார்த்தனச் செய்கின்றேன், ஆனால் நீங்கள் பொருமையுடன் இருக்க விரும்பினால் அதுவே மேலானது, என்று நபியவர்கள் கூறினர்கள். அதற் அம்மனிதன், “அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வேண்டிக் கொண்டார். அப்பொழுது நபியவர்கள் நல்ல முறையில் வுழூ செய்து கொள்ளுமாறு அந்தகரைப் பணித்தார்கள். பின்னர் பின் வருமாறு பிரார்த்தனை செய்யுமாறு கூறினார்கள்
اللهم إني أتوجه إليك بنبيك محمد نبي الرحمة يا محمد إني أتوجه بك إلى ربي في حـاجتي
لتقضي اللهم شفعه فيَّ. فعاد وقد أبصر)
“இறைவா! உனது காருண்ய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மூலம் உன்னை நான் முன்னோக்கு கின்றேன். அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தேவை யுள்ள விடயத்தில் உங்களின் மூலம் என் இறைவனின் பக்கம் நான் முன்னோக்குகிறேன். இறைவா! எனது தேவையை நீ நிறைவு செய்து தரும் பொருட்டு, உன்னிடம் எனக்குப் பரிந்துரைக்கின்றவராக இவர்களை ஆக்கியருள் வாயாக"
இதன் பிரகாரம் அம்மனிதர் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் தன் பார்வையைப் பெற்றவராக அங்கிருந்து திரும்பினார். இதுவும் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ட மற்றுமொரு சம்பவமாகும். எனினும் இதன் கருத்து தெளிவானது. அம்மனிதர் ரஸூல்(ஸல்) அவர்களிடம் தன்னக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டினார்கள் என்பதும், அதற்காக நபியவர்களை ஷபாஅத் செய்கின்றவராக- சிபாரிசு செய்கின்றவராக ஆக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள் என்பதும் இந்த சம்பவத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த சம்வத்தை எவ்வகையிலும் அனுமதிக்கப் படாத வஸீலாவுக்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மூன்றாவது காரணம்; ழஈபான, மற்றும் புணையப்பட்ட ஹதீஸ்களை அதாரமாகக் கொண்டு அதன் பிரகாரம் செயலாற்றுதல். அவ்வாறு அவர்கள் முன் வைக்கும் சில ஹதீஸ்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை களுக்கே எதிரானவை. எடுத்துக்கட்டாக ஒரு சில ஹதீஸைக் கவணிப்போம்.
توسلوا بجاهي فإن جاهي عند االله عظيم
*எனது கீர்த்தியின் பெயரால் என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் விடத்தில் என்னுடைய கீர்த்தி மகத்தானது". (ஹதீஸ்)
لما اقترف آدم الخطيئة قال: يا رب أسألك بحق محمد لما غفرت لي، فقال: يا آدم وكيف عرفت محمدًا ولم أخلقه؟ قال: يا رب لما خلقـتني بيـدك ونفخت فيّ من روحك رفعت رأسي فرأيت على قـوائم العـرش مكتوبًا: لا إله إلا االله محمد رسول االله، فعلمت أنك لم تضـف إلى اسمك إلا أحب الخلق إليك، فقال: غفرت لك ولولامحمـد مـا خلقتك
தவறிழைத்த ஆதம் “என் இரட்சகனே! முஹம்மதுவின் பொருட்டால் என்னை மண்ணித்தருள்" என்றார்கள். அதற்கு அல்லாஹ் “ஆதமே! முஹம்மதை இன்னும் நான் படைக்கவில்லை. அவரை எவ்வாறு நீ அறிந்து கொண்டாய்?" என்றான். அதற்கு ஆதம், என் இரட்சகனே! நீ என்னைப் படைத்து என் மீது உயிரையும் ஊதினாய் அல்லவா! அவ்வமயம் என் தலையை உயர்த்தினேன். அப்பொழுது அர்ஷின் கால்களின் மீது,
لاإله إلاالله محمد رسول الله
என்ற கலிமா பொறிக்கப்பட்டருந்ததைக் கண்டேன். எனவே உனக்கு மிகவும் விருப்பமுள்ள உனது ஒரு சிருஷ்டியை அல்லாது வேறு எவருடைய பெயரையும் உனது நாமத்துடன் இணைத்துக் கொள்ள மாட்டாய், என்பதை அப்போது புரிந்து கொண்டேன்." என்று கூறினார். அப்பொழுது அல்லாஹ் “நான் உன்னை மண்ணித்து விட்டேன், முஹம்மது இல்லையெனில் நான் உன்னைப் படைத்திருக்க மாட்டேன்" என்று கூறினான். (ஹதீஸ்) இவை அவர்கள் முன் வைக்கும் ஹதீஸ்களில் சில. இவை ழஈபான, புனையப்பட்ட ஹதீஸ்கள் என இமாம் தஹபீ அவர்கள் 'அல் மீஸான்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும்
من خرج من بيته إلى الصلاة، فقال: اللـهم إني أسـألك بحـق السائلين عليك، وأسألك بحق ممشاي هذا
வீட்டிலிருந்து ஒருவர் புறப்படும் போது “ இறைவா! பிரார்த்தனை செய்வோரின் உரிமையின் பொருட்டாலும் எனது இந்த நடையின் பொருட்டாலும் உன்னிடம் வேண்டுகிறேன்' என்ற ஹதீஸையும் அவர்கள் முன் வைக்கின்றனர். ஆனால் இதுவும் பலவீனமானது, என இமாம் தஹபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
முடிவாக, ஏகத்துவத்திற்கு எதிரான சகல வஸீலாக்களும், சிறிய, அல்லது பெரிய ஷிர்க்கின் பாலோ, ஹராமான பித்அத்துக்களின் பாலோ சிக்க வைக்கும் காரியங்கள் என்ற படியால் அவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வது ஏகத்துவ வாதியின் மீது கடமை என்பதைச் சொல்லி வைக்க விரும்புகிறேன். மேலும் இவை பிரார்த்தனை விடயத்தில் அத்துமீறிய செயல் என்ற படியால், இப்படியான பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அல்லாஹ்வின் விதி முறைகளுக்கு ஏற்ற துஆக்களை மாத்திரமே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஏகத்துவவாதி எப்போதும் அல்குர்ஆனிலும், ஸுன்னா விலுமுள்ள துஆக்களின் மீது ஆர்வம் கொள்வதே சிறந்தது. ஏனெனில் பிரார்த்தனைகள் சீக்கிரம் அங்கீகரிக்கப் படவும், மற்றும் மேலதிகக் கூலியைப் பெற்றுத் தரவும் அவை காரணமாக அமைகின்றன.
இறைவா! நிச்சயமாகப் பிரார்த்தனையை செவி மடுப்பவனும், அதனை ஏற்றுக் கொள்பவனும் நீயே. ஆகையால் உன் அழகிய திரு நாமங்கள், உயரிய பண்புகள், உனது காருண்ய நபியின் மீதுள்ள நமது பின்பற்றல், அவரின் மீதான நமது அன்பு, உனது திருப் பொருத்தத்தை எதிர்பார்த்து நாம் மேற் கொள்ளும் நமது ஸாலிஹான அமல்கள். ஆகியவற்றை முன்வைத்து உன்னிடம் நாம் வேண்டுகிறோம். உன் பாதையில் அழைப்பு விடுக்கும் உனது ஏகத்துவ வாதிகளான நல்லடியார்களில் நம்மையும் ஆக்கியருள்வாயாக. மேலும் உனது நபியின் நேரிய வழியின் மீதும் உண்மையின் மீதும் நம்மை நிலைத்திருக்கச் செய்வாயாக. மேலும் நமது எதிரிகளின் மேல் நமக்கு வெற்றியையும் தந்தருள்வாயாக. ஆமீன்
وصلى الله وسلم على نبيينا محمد وعلى آله وصحبه ومن والاه الى يوم الدين
***********************************************